கடும் மழை காரணமாக பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன – பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன

Share Button

மகாவலி நீர்த்தேக்கத்தின் பல வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை மற்றும் பொலன்னறுவையில் பெய்யும் மழை காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க சோமாவதி புனித பூமியில் நீரில் மூழ்கியுள்ளது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. உல்ஹிட்டிய, ரத்ஹித்த நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுங்காவில மற்றும் சோமாவதி வணக்கஸ்தலத்திற்கான வீதி பல இடங்களில் நீரில் மூழ்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்ட்டவர்களுக்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் எம். உதயக்குமார் தெரிவித்துள்ளார். ஆறு பிரதேச செயலகங்களில் ஆயிரத்து 50 குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்து 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, கிரான், வாழைச்சேனை, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வழங்கி வருகின்றது. தாழ்நில பிரதேசங்களில் வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கிரான் பகுதிக்கான அவசர போக்குவரத்தில் கடற்படையினர் இயந்திரப் படகு சேவைகளை முன்னெடுக்கின்றனர். அனர்த்தத்தினால் ஏற்படுகின்ற பாதிப்பினை குறைப்பதற்கு படையினரும் தயார் நிலையில் உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக 1609 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 இடைத்தங்கல் முகாம்களில் 242 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக நட்டஈடுகள் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அனர்த்தம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அது தொடர்பில் அறிவிக்க 117 என்ற தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11