பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கப்படுகிறது
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, விரைவாக நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.
அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு தற்சமயம் 50 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளை புனரமைப்பதற்கு தேவையான நிதி தற்சமயம் குறித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுகளையும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ குறிப்பிட்டார்.