தேர்தல் ஆணைக்குழுவிற்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு
தேர்தல் ஆணைக்குழுவிற்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் விசேட தேவை உடையவர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெறவிருக்கும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் 52 சதவீதம் பெண்கள் உள்ள போதும் பாராளுமன்றத்தில் வெறுமனே ஐந்து சதவீதமான பெண்களின் பிரதிநிதித்துவமே காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஒருவர் மட்டுமே விசேட தேவையுடையவராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார். லக்ஸ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் தொடர்பான நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
தேர்தல்கள் ஆணைக்குழு, பிரிட்டிஸ் கவுன்சில் மற்றும் முஸ்லிம் எய்ட் அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.