உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி அமைச்சர் ரயில்வே தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை.

Share Button

உடனடியாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, ரெயில்வே தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளின் நலன்கருதி விசேட பஸ் சேவைகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த பஸ் சேவைகளுக்கான செலவினங்களை நிதி மற்றும் ஊடக அமைச்சு பொறுப்பேற்குமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சில ரெயில்வே தொழிற்சங்கள் சடுதியாக ஆரம்பித்த வேலைநிறுத்தம் காரணமாக, பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். இந்த வேலைநிறுத்தத்தை ஆட்சேபித்து ரெயில் பயணிகள் கோட்டை ரெயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக, அயல் பிரதேசங்களில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், ரெயில்வே சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இத்தகைய திடீர் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து பெருமளவு பயணிகள் வீடு செல்ல முடியாமல் ரயில் நிலையங்களில் கஷ்டப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பல பயணிகள் பெரும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியதாகவும் அறிவிக்கப்படுகிறது. கோட்டை ரயில் நிலையத்தில் பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

ரெயில் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளின் நலன்கருதி விசேட நேற்று பஸ்சேவைகள் நடத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் வண்டிகளையும், தனியார் பஸ் வண்டிகளையும் இணைத்து கூட்டு பஸ் சேவைகள் நடத்தப்பட்டன. கொழும்பு புறக்கோட்டை மத்திய நிலையத்திற்கு கூடுதலான பஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ரெயில் பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகளில் இலவசமாக பயணிக்கும் வசதி ரெயில் பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் நேரகாலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வரவேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாணவர்களின் நலன்கருதி இராணுவம் விசேட பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ரயில் ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை துரிதமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் பற்றி துறைசார்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொருத்தமான தீர்வுகளை நாடப் போவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன விடுத்த அறிக்கையில் ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களை பணயக் கைதிகளாக வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது மிகவும் வருந்தத் தக்க விடயம் என்று குறிப்பிட்டார். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு கடமைக்கு திரும்பக்கூடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். அரசாங்கம் நாட்டின் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த பாடுபடுகிறது. அதனை பலவீனமாக கருதக்கூடாது எனவும் திரு சுதர்ஷன குணவர்தன தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11