கொவிட் தொற்றிலிருந்து நாட்டை விடுவிக்க அனைவரும் சுகாதாரத் துறைக்கு ஆதரவு வழங்க வேண்டுமென மௌலவி அன்வர் ஹக்கம்தீன் வலியுறுத்தல்
கொவிட் தொற்றிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு சுகாதாரத் துறைக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென மௌலவி அன்வர் ஹக்கம்தீன் தெரிவித்துள்ளார். சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேவையான பரிசோதனைகளுக்கு சமூகமளித்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாகவும் விஞ்ஞான அடிப்படையில் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற மக்கள் பிசிஆர் பரிசோதனை தொடர்பில் தேவையில்லாமல் அச்சமடையத் தேவையில்லை என்றும் அன்டிஜன் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுள்ளார். அனைத்து நோய்களுக்கும் மருந்து உண்டு என்று புனித அல் குர்ஆன் கூறுகின்றது. அதனால் நோய்க்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதே இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.