காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் மேல் மாகாணத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார்கள்
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இன்று கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கிறது. கொழும்பு சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகள் தொடர்பான லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
காணாமல் போனோரின் அலுவலகத்தின் இந்த மக்கள் சந்திப்பு மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கடந்த தினங்களில் இடம்பெற்றிருந்தன. எதிர்வரும் சில வாரங்களில் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று இவ்வாறான சந்திப்புக்களை நடத்த அந்த அலுவலகம் திட்டமிட்டுள்ளது. கடந்த மக்கள் சந்திப்புக்களின் போது, காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள், காணாமல் போனோர் தொடர்பான சிவில் சமூக அமைப்புக்கள், சிவில் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கருத்துக்களை சமர்ப்பித்திருந்தார்கள். காணாமல் போனோரின் அலுவலகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது இதன் நோக்கமாகும். காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆகியோர்களின் நிலை, காணாமல் போன விடயங்கள் என்பனவற்றை கண்டறியவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த பெப்ரவரி மாதம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு;ள்ளது.