நாட்டில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் ஆளணி வசதிகளை ஐந்து வருடங்களுக்குள் பூரணப்படுத்தும் வகையிலான திட்டம் தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு
மக்கள் திட்டங்களை செயற்படுத்த மாவட்ட மற்றும் பிரதேச அபவிருத்திக் குழு கூட்டங்களில் தீர்மானிக்கும் அதிகாரமுள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். பொறுப்பான அதிகாரிகளின் சரியான பங்களிப்பு இல்லாததே பயனுள்ள திட்டங்கள் தாமதமடைவதற்கு காரணம் என்பதை ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக புரிந்து கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
காணிப் பிரச்சினைகள் உட்பட பல கிராமப்புற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கும்போது அதிகாரிகள் களத்திற்குச் சென்று உண்மையான நிலைமையை அவதானித்து தீர்மானங்களை மேற்கொள்வது முக்கியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வௌ பிரதேச செயலக பிரிவில் உள்ள பலீகம கிராம சேவகர் பிரிவின் நெலும்வௌ சனசமூக நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்ற 11 வது ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
காட்டு யானைகள் பயிர்கள் மற்றும் உயிர்களுக்கு ஏற்படுத்தும் சேதம் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய பிரச்சினையாகும். இந்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வன்றி திட்டமிட்ட, நீண்ட கால தீர்வை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கிராமத்துடன் உரையாடலில், பிரதேச கல்வித் தேவைகள் பற்றி ஜனாதிபதி ஆராய்ந்தார். பிரதேச பாடசாலைகளின் கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்யவும், ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பவும் ஜனாதிபதிஅதிகாரிகளை அறிவுறுத்தினார்.
நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் கட்டிடங்கள் மற்றும் மனிதவளத் தேவைகளை ஐந்து ஆண்டுகளுக்குள் தீர்க்கும் வகையில் திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
பிரதேசததில் உள்ள வீதிகள், கால்வாய்கள், பாலங்கள் என்பவற்றை அபிவிருததி செய்வதற்கும் இதன் போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனமடுவ, சிலாபம், நவகத்தேகம, தப்போவ மற்றும் அலுத்வௌ மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவர் தாதியர் மற்றும் ஏனைய ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்;.
இதேவேளை, வனாதவில்லு பகுதியில் வசிக்கும் விவசாயியான விஜேரத்ன கோவிட் நிதிக்கு நன்கொடையாக 50 ஆயிரம் ரூபாவை ஜனாதிபதியிடம வழங்கினார்.
‘கிராமத்துடன் உரையாடல்’ திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும்.