பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றது. இருதரப்பு உறவுகள் பற்றி இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்திருக்கிறது.
இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கு அமைவாக, இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
சுற்றுலா தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை முதலீட்டு சபையும், பாகிஸ்தான் முதலீட்டுச் சபையும் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்திற்கும், பாகிஸ்தான் – கராச்சி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகமும், இஸ்லாமாபாத் – கொம்ஸட் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கொழும்பு பல்கலைக்கழகமும், லாஹூர் பொருளாதார கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.