எதிர்த்தரப்பினரது மனங்களை வென்ற அரசியல்வாதியாக அமரர் வி.ஜே.மு.லொக்குபண்டார திகழ்ந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
முன்னாள் சபாநாயகரான வி.ஜே.மு லொக்குபண்டாரவின் இரங்கல் பிரேரணை இன்று பாராளுமன்றில் பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரங்கல் பிரேரணையினை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்து உரையாற்றினார். அமரர் லொக்குபண்டார மக்கள் நேயமிக்க அரசியல்வாதி என குறிப்பிட்டார்.
லொக்குபண்டார எதிர்;தரப்பினரது மனங்களையும் கவர்ந்த அரசியல்வாதி என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டார். அவர் அரசியல்வாதியாக செயற்பட்டதுடன், தேசத்தின் மீதான ஆர்வத்தை கைவிடாத சிறந்த ஒரு மனிதராகவும் திகழ்ந்தார்.
சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற வி.ஜே.மு. லொகுபண்டார ஒரு வழக்கறிஞராகவே அரசியலில் நுழைந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசியலில் நுழைவதற்கு முன்பே, சிங்கள மொழி, கலாசாரம் மற்றும் சமயம் ஆகியவற்றின் மீது ஆழமான பிணைப்பை கொண்டிருந்ததாக பிரதமர் கூறினார்.
வி.ஜே.மு. லொகுபண்டாரவினால் தேசத்திற்கு பங்களித்த பல சிறந்த படைப்புகளும் உள்ளன. சீகிரியா கீ சிறி போன்ற விமர்சன படைப்புகள் மொழி மற்றும் கலாசார ஆர்வலர்களிடையே அதிகம் பேசப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கல் உரையில் குறிப்பிட்டார்.
சிறந்த அரசியல் சித்தாந்தம் கொண்ட தலைவராக லொக்குபண்டார திகழ்ந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறினார்.
சுதேச வைத்தியதுறையினை பிரபல்யப்படுத்துவதற்கு அவர் மகத்தான பங்காற்றியதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதன் போது தெரிவித்தார்.
பல்திறமை மிக்க மக்கள் தலைவராக லொக்குபண்டார திகழ்ந்தார் என்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
அவர் வகித்த சகல பதவிகளுக்குரிய கடமையினையும் பொறுப்புடன் நிறைவேற்றியதாக அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அமரர் வி.ஜே.மு லொக்குபண்டார சிறந்த அரசியல்வாதியாக செயற்பட்டதுடன், தனிப்பட்ட வாழ்விலும் சிறந்த குணாம்சங்களை கொண்டிருந்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கு அறநெறி கல்வியை வழங்கல் உள்ளிட்ட பாரிய சேவைகளை லொக்குபண்டார ஆற்றியதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர கூறினார்.