இம்முறை அரச வெசாக் வைபவத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி, நாகதீப விஹாரையில் நடத்துவதற்கு தீர்மானம்
இம்முறை அரச வெசாக் வைபவத்தை நாகதீப ரஜமஹா விஹாரையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, வெசாக் வைபவத்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணரட்னவுக்கு இது தொடர்பில் நேற்று பணிப்புரை வழங்கினார். இவ்விரு மாகாணங்களிலும் உள்ள 65 விஹாரைகளையும், 35 அறநெறி பாடசாலைகளையும் இணைத்துக் கொண்டு இம்முறை அரச வெசாக் வைபவம் இடம்பெறவுள்ளது. வழமையாக இடம்பெறும் வெசாக் நிகழ்விற்கு பதிலாக, ஏனைய மதங்களுடன் சேர்ந்து இம்முறை அரச வெசாக் வைபவத்தை ஒழுங்கு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக புத்தசாசன அமைச்சின் கீழ் இயங்கும் இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களங்கள் இணைந்து செயற்படுகின்றன.