பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவாக விண்ணப்பம் கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை
பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர்களை வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பம் கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வித்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார். விவசாயத்துறையில் விளைச்சலை அதிகரிப்பதற்காக, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த விவசாயிகளுக்கு உதவுமாறும் ஜனாதிபதி; வலியுறுத்தினார்.
மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஏழ்மையான குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
திருகோணமலை மாவட்டத்தில், கோமரன்கடவல பிரதேச செயலக பிரிவின் கிவுலேகடவல கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிவுலேகடவல வித்தியாலய வளாகத்தில் நேற்று நடைபெற்ற ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ 12வது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றபோதே ஜனாதிபதி; இதனைத் தெரிவித்தார்.
கிவுலேகடவல பாடசாலையில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையையும் ஜனாதிபதி இதன்போது திறந்து வைத்தார்.
கிராம மக்களினின் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காணி கச்சேரியொன்றை நடத்தி மகதிவுல்வௌ மற்றும் திவுல்வௌ பகுதிகளில் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இதன்போது திர்மானிக்கப்பட்டது. யாங் ஓயா திட்டத்தால் காணிகளை இழந்து நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், ஏனைய பிரச்சினைகளை தீர்க்கவும் மாவட்ட செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் திர்மானிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் 34 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் 34 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக 15 பாடசாலைகளில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது கூறினார்.
இதேவேளை, நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணினி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களின் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப அடுத்த வாரம் விண்ணப்பங்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
கிவுலேகடவல வித்தியாலயத்திற்கு கேட்போர்வுடம் மற்றும் வகுப்பறைகள் அமைக்கவும், கோமரங்கடவல மகா வித்யாலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோமரங்கடவலவை ஒரு கல்வி வலயமாக பெயரிடுவது மற்றும் மஹதிவுல்வௌ மகா வித்தியாலயத்தை மும்மொழி மாதிரி பாடசாலையாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிரதேசத்திலுள்ள விவசாய வீதி வலையமைப்பை புனரமைப்பது குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். 41 வீதிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் காபட் விதிகளாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தினார். பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் சுகாதர பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நிர்ப்பாசணத்திட்டங்களை மேம்படுத்துவத குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
பிரதேசத்தின் 39 குளங்களை புனரமைப்பதற்காக 125 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ‘நீர்ப்பாசன சுபீட்சம்’ திட்டத்தின் கீழ் மேலும் 99 குளங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் இதன் போது தெரிவித்தார்.
54 கிராம அதிகாரி பிரிவுகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அடம்பனே நீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.