மாக்கந்துரே மதுஷ் உட்பட 31 பேர் டுபாய் நீதிமன்றில் ஆஜர்
பாதாள உலகத் தலைவரும் போதைப்பொருள் வர்த்தக முக்கிய புள்ளியுமான மாக்கந்துர மதுஷ் உட்பட 31 பேர் இன்று டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
கடந்த ஐந்தாம் திகதி அதிகாலை டுபாய் அதிசொகுசு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற ஒன்றுகூடல் வளாகத்தை முற்றுகையிட்ட பொலிஸார் போதைப்பொருள் கடத்தல் சம்பவ சந்தேகத்தின் பேரில் அங்கிருந்தவர்களை கைது செய்துள்ளனர். அங்கிருந்தவர்கள் சட்டவிரோதமாக போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்ட 31 பேரின் இரத்த மாதிரி பரிசோதனையின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை அருகில் வைத்திருப்பது பயன்படுத்துவது ஆகியன டுபாய் நாட்டில் மிகப் பாரிய குற்றங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மாக்கந்துர மதுஷ் உட்பட ஏனைய இலங்கையர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை என்று இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.