சுயாதீன நீதிமன்ற செயற்பாட்டிற்காக ஐக்கிய தேசியக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்

Share Button

சுயாதீன நீதிமன்றங்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்புடன் செயற்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அரசமைப்புச் சபை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் இன்று கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

19ஆவது அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி கிடைத்துள்ளது. அந்தத் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் ஏதும் இருக்குமாயின் பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்க வேண்டும். எனினும், அதனூடாக சிலரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரச நிறுவனங்களை அரசியலாக்குவதைத் தடுப்பதற்கான வழிவகையே அரசமைப்புச் சபையாகும் என விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தைப் போன்ற முன்மாதிரியான திருத்தச் சட்டம் இதற்கு முன்னர் முன்வைக்கப்படவில்லை. எனவே, இதனை வலுவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன விவாதத்தில் கலந்துகொண்டபோது குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சுயாதீன ஆணைக்குழுவின் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று அந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அரசமைப்புச் சபையின் தலைவராக செயற்படும் சபாநாயகருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் விவாதத்தில் கலந்துகொண்டபோது தெரிவித்தார். சபாநாயகர் சுயாதீனமான முறையில் செயற்படுவதாகவம் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *