இன்று சர்வதேச மகளிர் தினமாகும் – நாடு முழுவதும் விசேட நிகழ்வுகள்

Share Button

இன்று சர்வதேச மகளிர் தினமாகும்.

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் சேவையாற்றிய பெண்கள் முதலாளிமாருக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவுகள் சர்வதேச மகளிர் தினத்தை பிரகடனப்படுத்த வழி வகுத்தன.

தமது தொழிற்சாலையில் நிலவிய வேலை செய்ய முடியாத நிலைமையை ஆட்சேபித்தும், குறைந்த சம்பள கொடுப்பனவுகளை எதிர்த்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து 1910ம் ஆண்டு டென்மார்க்சில் கொப்பன்ஹேகன் நகரில் உலக மகளிர் மாநாடு இடம்பெற்றது. இதில் ஜேர்மனியை சேர்ந்த கிளாரா பெலுகின் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தார். இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஒவ்வொரு வருடமும் மார்ச் எட்டாம் திகதியை மகளிர் தினமாக கொண்டாவடுவது என தீர்மானிக்கப்பட்டது.

1911ம் ஆண்டு ஜேர்மனியில் முதற்தடவையாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இலங்கை 1978ம் ஆண்டு தொடக்கம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறது.

இந்தத் தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி உள்ளன. பிரதான வைபவம் அனுரதாபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெறும். திறன்மிக்க பெண்மணியும் அழகான உலகமும் என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சி ஏற்பாடாகி உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார். பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, மகளிர் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோரும் பங்கேற்பார்கள். தேசிய மகளிர் தின நிகழ்ச்சியை ஒட்டியதாக அனுராதபுரம் சல்காது மைதானத்தில் வர்த்தக கண்காட்சி ஏற்படாகி உள்ளது. இதில் பெண்களது உற்பத்தி பொருட்கள் அடங்கிய நூற்றுக்கு மேற்பட்ட விற்பனை கூடங்கள் அமைந்திருக்கும். பெண்களுக்காக விசேட மருத்துவ முகாமும் இடம்பெறும்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பெண் என்பவள் அப்பாவி தனத்தின் சின்னமாக திகழ்வதாக மகாத்மா காந்தி கூறிய போதிலும், இன்று சமூகம் வரையறுக்க பாரம்பரிய வகிபாகங்களை தாண்டி பெண்கள் சிகரங்களை நோக்கி நகரக் கூடியவர்களாக மாறியிருக்கிறார்கள் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார். பெண்களின் முன்னேற்றத்தை பொறுத்தவரையி;ல் இலங்கை முன்னணியில் திகழ்கிறது. சக ஆசிய நாடுகளுக்கு முன்னதாக பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கி உலகின் முதலாவது பெண் பிரதமரையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியையும் தெரிவு செய்த நாடாக இலங்கை திகழ்கிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரங்கிலும் இலங்கை பெண்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். கடந்தாண்டு பிபிசி உலக சேவை உலகில் ஆகக் கூடுதலான தாக்கம் செலுத்தக் கூடிய பெண்களின் பட்டியலை தொகுத்தது. அதில் இலங்கையை சேர்ந்த சமுத்திர உயிரியியல் விஞ்ஞானி ஒருவரும் இடம்பிடித்துள்ளார். கலங்களில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கான ஆய்வுகளில் முன்னின்றவரும் இலங்கைப் பெண்ணொருவரே. அத்துடன் இலங்கைய சேர்ந்த யுவதி ஒருவர் எவரெட்ஸ் சிகரத்தை அடைந்துள்ளார். இவையெல்லாம் இயல்பாக நிகழ்ந்தவை அல்ல. போஷாக்குள்ள உணவு, கல்வி, சுகாதார வசதிகள், சமூக கலாசார அரசியல் உரிமைகளை அனுபவிக்கக் கூடிய சமவாய்ப்பு போன்றவை கொண்ட நாடாக இலங்கை வளர்ச்சி கண்டதன் பலாபலனாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான சகல விதமான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார். ஆண் பெண் சமத்துவம் நிலவக் கூடிய சமூகத்தை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான சூழலும் சந்தர்ப்பமும ;உலகில் உருவாகி இருக்கிறது. இன்றைய உலகின் தகவல் தொலைத்தொடர்பாடல், கல்வி, கலை இலக்கியம், விஞ்ஞானம் என்ற ரீதியில் சகல துறைகளிலும் பெண்களது பங்களிப்பு கணிசமாக வளர்ச்சி கண்டுள்ளது.

உலகம் முழுவதும் நிலைபேறான இருப்பை உத்தரவாதப்படுத்தும் முயற்சிகளில் சகல தடைகளையும், சவால்களையும் தாண்டி அளப்பரிய அர்ப்பணிப்புடன் முன்னேற்றப் பாதையில் செல்லும் அளவுக்கு பெண்கள் வளர்ச்சி கண்டுள்ளார்கள். ஒரு பெண் பெற்ற வெற்றியானது ஒட்டுமொத்த சமூகத்தினதும் வெற்றியாகும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகளிர் அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டாரவும் விசேட செய்தி ஒன்றை விடுத்துள்ளார். எந்தவொரு நாடு பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கி அவர்களை ஆட்சி நிர்வாக பொறுப்பு வழங்கும் வகையில் உயர்த்தி நிற்கின்றதோ, அந்நாட்டில் சமூக அபிவிருத்தி சிறந்து விளங்குகிறது என கருதலாம். ஒரு மகளாக, சகோதரியாக, தாயாக, மனைவியாக சகல பெண்களையும் ஆண்கள் சரியான முறையில் மதிப்பது அவசியம். ஆனால், பெண்களுக்கு எதிரான அவதூறுகளையும் கேலிகளையும் அவதானிக்கையில், அவர்களுக்கு உரிய கௌரவத்தை சமூகம் வழங்குகின்றதா என்ற கேள்வி எழுவதாக அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி உள்ளன. இன்று ரயில் சேவையில் பெண்கள் மாத்திரம் பயணிக்கக் கூடிய பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலக்க பெரன்ணாடோ தெரிவித்துள்ளார். பிரதான மார்க்கத்திலும் தென் கரையோர மார்க்கத்திலும் புத்தளம் மார்க்கத்திலும் சேவையில் ஈடுபடுத்தப்படும் அலுவலக ரயில்களில் மகளிர் மட்டும் என்ற பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய பெட்டியொன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி வெயங்கொட ரயில் நிலையத்தில் இடம்பெறும். அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11