நாட்டின் அரசியல் அமைப்பை மீறி செயல்பட முடியாதென ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சுட்டிக்காட்டியமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது

Share Button

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இந்த முறை சிறந்த முறையில் செயல்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்காக தக்க கருத்துக்களை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் அரசியல் அமைப்பை மீறி செயல்பட முடியாதென வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சுட்டிக்காட்டியமை மிகவும் முக்கியமானது எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டார். வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்;ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இராஜதந்திரிகள் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க விவாதத்தில் கலந்து கொண்டு குறிப்பிட்டார். இராஜதந்திரிகளுக்கு உரிய பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை எனவும், வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் இல்லை எனவும் அரசாங்கம் தெரிவித்தமையை வரவேற்பதாக விவாதத்தில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்து, இன ஒற்றுமையை வளர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சர்வதேசத்தினால் பாராட்டப்பட்டிருப்பதாக விவாதத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டார்.

விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னர் செயல்பட்டுவந்த தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென குறிப்பிட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினரின் வசமுள்ள பெரும்பாலான இடங்கள் தற்போது விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *