அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்துல் அஸீஸ் புத்தெப்லிக்கா பதவியை இராஜினாமா

Share Button

அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்துல் அஸீஸ் புத்தெப்லிக்கா பதவியை இராஜினாமா செய்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவரது இராஜினாமா இடம்பெற்றிருப்பதாக அல்ஜீரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. 20 வருட ஆட்சியின் பின்னர் 82 வயதான ஜனாதிபதி அப்துல் அஸீஸ் புத்தெப்லிக்கா பதவியை இராஜினாமா செய்திருக்கிறார். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இராஜினாமா தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி புத்தெப்லிக்காவை பதவியிலிருந்து விலக்குவதற்கான தீர்மானத்தை எடுக்குமாறு அல்ஜீரிய இராணுவம் அறிவித்து சில மணித்தியாலங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நாட்டு மக்களின் ஆத்மாக்களையும், சிந்தனைகளையும் அமைதியடையச் செய்யும் நோக்குடன் இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும், அல்ஜீரியாவில் வளமான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து செயற்பட முடியும் என்றும் புத்தெப்லிக்கா அரசியல் அமைப்புப் பேரவைக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். நிலைமை மோசமடைவதை தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அல்ஜீரிய ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி அப்துல் அஸீஸ் புத்தெப்லிக்கா ஆறு வருடங்களுக்கு முன்னர் மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், கடமைகளை புரிவதில் அவர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *