தேர்தலை ஒத்திவைக்கும் எந்தத் தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்

Share Button

தேர்தலை ஒத்திவைக்கும் எந்தத் தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாதென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் பழைய முறைக்கு அமைய நடத்தப்பட வேண்டும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளித்து உரையாற்றினார்.

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பது மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடாகும் என்று விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் என்று இரண்டு தலைவர்கள் சுட்டிக்காட்டியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நினைவுகூர்ந்தார். இதற்கமைய, பேச்சுவார்;த்தையின் பெறுபேறுகள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

வாகன இறக்குமதி படிப்படியாக இடம்பெறுகிறதென விவாதத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அரச ஊழியர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். நுண்கடன் என்ற குழியிலிருந்து மக்களை பாதுகாக்க கடன் ஒழுங்குறுத்தல் அதிகாரசபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று அமைச்சர் மங்கள சமரவீர கூறினார். இது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்து உரையாற்றினார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் காலத்தில் நுண் நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் எதிர்கட்சித் தலைவர் நுண் கடன் பற்றி கருத்து வெளியிடுகின்றமை நகைப்புக்குரியதாகும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *