இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு பெரும் வெற்றி – இலங்கை ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Share Button

இந்தியாவின் 17 ஆவது லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியீட்டியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 310ஆசனங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், 16தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் ஹிந்து பத்திரிகை அறிவித்துயள்ளது.

ஆறு வாரங்களாக இடம்பெற்ற தேர்தலில் 600 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்தியப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பிரதமர் மோதி முன்னெடுத்துச் சென்ற கொள்கைகள் தொடர்பில் இந்திய மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி அவருக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக அந்நாட்டு மக்கள் பெற்றுக்கொடுத்துள்ள மற்றுமொரு முக்கிய சந்தர்ப்பமாக இந்த வெற்றி அமைந்துள்ளது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதியின் கடந்த கால ஆட்சியின் போது இந்தியா பெற்றுக் கொண்ட வெற்றிகளில் சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசார மறுசீரமைப்புக்கள் பல இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அயல் சகோதர நாடான இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பிளவுபடாத தொடர்பு இருந்து வருகின்றது. நரேந்திர மோதியுடன் மிகவும் நெருக்கமாக செயற்படுபவர் என்ற வகையில் அவரின் எதிர்கால ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உலகின் பலமிக்க பொருளாதார வல்லமையைக் கொண்டுள்ள இந்தியா, பிராந்திய முன்னேற்றத்திற்கு முக்கிய பணியை ஆற்றி வருகின்றது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இலங்கை இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செய்படுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பொதுத் தேர்தலில் பிரதமர் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்றமை குறித்து தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக திரு.ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பிஜேபி பெற்றுள்ள பெரும்பான்மை வாக்குகள், இந்திய மக்கள் பிரதமர் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2