மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாக வைத்து முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானித்தோம் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம்
மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாக வைத்து முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். அடிப்படைவாதிகள் சிலரின் செயற்பாடுகள் காரணமாக 1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் போன்ற ஒரு பதற்றம் ஏற்படலாம் என தோன்றியது.
இது தொடர்ந்தும் நீடித்தால் சர்வதேச ரீதியிலும் அது அபகீர்த்தியாக அமையும். அந்த சிறுதரப்பின் செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களினதும் சொத்துக்கள் மற்றும் உயிர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தடங்கலை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதனால், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தி பொருளாதார செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தாம் அமைச்சு பொறுப்பில் இருந்து விலகியதாக கபீர் ஹாஷிம் குறிப்பிட்டார். இன, மத அடிப்படையிலான அரசியலின் அடிப்படையில் அற்ப அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் எண்ணம் தன்னிடம் இல்லை என அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், மகாநாயக்கர்களின் அனுசாசனங்களுக்கு சிரம் தாழ்த்தி அவர்களின் ஆலோசனைப்படி எதிர்காலத்திலும் செயற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.