உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நத்தார் தினத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று பிரதமர் தெரிவிப்பு

Share Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் சேதமடைந்துள்ள மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இந்த தேவாலயத்தை இன்று பார்வையிட்ட போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்காகவும் 24 கோடி ரூபா நிதி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பது தொடர்பிலும், சேதமடைந்த சொத்துக்களுக்காக நஷ்டஈடு வழங்குவது தொடர்பிலும் பிரதமர் இதன் போது கருத்துத் தெரிவித்தார்.

 

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் தேவாலயத்தின் புனர் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்திய பிரதமர் இந்தப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் இராணுவத்தினருக்கு தனது நன்றியை தெரிவித்தார். தேவாலயத்தின் வணக்கத்திற்குரிய பிதா ரொஷான் மஹேஸ் மனோசனை பிரதமர் சந்தித்தார். இதன் போது, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக வணக்கத்திற்குரிய பிதா குறிப்பிட்டார். தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து சொத்துக்கள் மற்றும் மக்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பிரதமர் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு அனைத்து மக்களின் பாராட்டும் உரித்தாகும் என்று வணக்கத்திற்குரிய பிதா மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *