ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பிலான அதிகாரம் இன்றிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்

Share Button

ஜனாதிபதித் தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்ட அதிகாரம் இன்றிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பொறுப்பாவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக 17 வேட்பாளர்கள் இதுவரை அறிவித்துள்ளார்கள். 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இது பற்றி அறிவித்திருப்பதாக அவர் கூறினார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவிருக்கும் தினத்திற்கு முந்தைய தினம் செலுத்தப்படும் கட்டுப்பணங்களை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை வரலாற்றில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் தினம் ஒக்டோபர் 15ஆம் திகதி நிறைவடைகின்றது. அன்றைய தினத்திலிருந்து 63 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைக்கு அமைய, தேர்தலை நடத்தும் தினம் அறிவிக்கப்படும் என்றும் அரசியல்வாதிகள் அல்லது சோதிடர்களுக்கு தேவையான தினம் அதற்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக இவ்வருட தேர்தல் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த பட்டியல் தற்சமயம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *