இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம்

Share Button
நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. தெற்காசியாவின் மிக உயரமான தொலைத்தொடர்பு கோபுரமாகக் கருதப்படும் இந்த தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றினார்.
கொழும்பு தாமரைக் கோபுரத்தை அமைப்பதற்காக சீனாவின் எக்ஷிம் வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகைக்காக ஒவ்வொரு வருடமும் 2400 மில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிடடார்.  இவ்வாறு 10 வருடங்கள் செலுத்த வேண்டும். சர்ச்சைக்குரிய உடன்படிக்கை மூலம் நாடு இழக்க நேரிட்ட பெருந்தொகை பணத்தை சேமித்து இந்தக் கோபுரம் திறந்து வைக்கப்படுகிறது. இதனை அமைப்பதற்காக சீனா அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தை வழங்கியது. இதற்கான முத்தரப்பு உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டது. இதன்கீழ், 16 பில்லியன் ரூபா கடன் சீனாவின் எக்ஷிம் வங்கியினால் இலங்கைக்கு கிடைக்க இருந்தது. எனினும் அதில் 12 பில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப் பெற்றது. 2017ம் ஆண்டளவில் எஞ்சிய தொகையை அந்த வங்கி செலுத்துவதை நிறுத்திக் கொண்டது. இதற்கான காரணம் 2012ம் ஆண்டில் கோபுரத்தின் பணிகளை ஆரம்பிக்கும் போது எலிற் என்ற நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை செலுத்தியிருந்தமையாகும். 2016ம் ஆண்டில் அவ்வாறான ஒரு நிறுவனம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், 200 கோடி ரூபாவுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிய முடியாமல் போனது. இது தொடர்பில் விசாரணையொன்றும் மேற்கொள்ளப்பட்டது. சீனாவுக்கான இலங்கைத் தூதுவரிடமும் இந்தக் கம்பனி குறித்து கண்டறியுமாறு கூறப்பட்டது. எனினும், அவ்வாறான ஒரு நிறுவனம் இல்லை என அந்தத் தூதரகம் அறிவித்தது. எஞ்சியுள்ள வேலைகளை பூர்த்தி செய்வதற்கு மேலும் 3 ஆயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாக ஜனாதிபதி கூறினார். இந்த செயற்திட்டத்தின் மொத்த செலவினம் 19 பில்லியன் ரூபாவாகும். எனினும், இந்த கோபுரம் நாட்டிற்கு கிடைத்த ஒரு வளமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். அதனால், இதனைப் பாதுகாப்பதும் நிர்வகிப்பதும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *