நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் தெரிவிப்பு

Share Button

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இதுவிடயம் குறித்த அறிக்கை ஒன்றை அலரி மாளிகையில் இருந்து பிரதமர் விடுத்துள்ளார்.

கடந்த வாரம் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கட்சியின் இந்த நிலைப்பாடு குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது என்றும் திரு.விக்ரமசிங்க குறிப்பிட்டார். அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் குறித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ளும்படி இந்த பிரதிநிதிகள் தம்மிடம் வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் தெரிவித்தார்.

கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த சிவில் சமூக பிரதிநிதிகள் தம்மிடம் இதுவிடயம் குறித்த பிரேரணை ஒன்றை கையளித்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  ஏனைய கட்சிகளின் ஆதரவு இன்றி 20ஆவது திருத்தம் சாத்தியப்படாது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார். எனவே ஏனைய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து அதுபற்றி தம்மிடம் அறிவிக்கும்படி சிவில் சமூக பிரதிநிதிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

உத்தேச 20ஆவது திருத்ததிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு மிக அவசியம் என்று தாம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார். கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை தொலைபேசி மூலம் அழைத்து இந்த விடயம் பற்றி கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை கூட்டம் ஒன்றை கூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தினார். அந்தவேளையில் சிவில் சமூக பிரதிநிதிகளின் வேண்டுகோள் குறித்த தகவல்களை தாம் ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொண்டதாக பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இது விடயம் குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு பற்றி தமக்கு அறியத்தந்ததனால், அமைச்சரவை கூட்டமொன்றை கூட்டி இதுவிடயம் குறித்து ஆராய்வது பொருத்தமானது என்று தாம் ஜனாதிபதியிடம் கூடியதாக பிரதமர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *