காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்

Share Button

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார்.

ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 539 பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள். காலி மாவட்டத்தில் ஒன்பது வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், பத்து சிறு மற்றும் மத்திய தர வியாபார நிலையங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை மாவட்டத்தில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்த நிலைமைகளுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மெற்கொண்டுள்ளது. முதற் கட்டமாக பிரதேச செயலாளர்களுக்கு பத்து லட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்திற்காக ஒன்று தசம் ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், மாத்தறை மாவட்டத்திற்கு ஒன்று தசம் மூன்று மில்லியன் ரூபாவும், களுத்துறை மாவட்டத்திற்கு ஐந்து லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும், கேகாலை, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, வளல்லாவிட்ட, மத்துகம மற்றும் அகலவத்த ஆகிய பிரதேசங்களுக்கும், காலி மாவட்டத்தின் அல்பிட்டிய, நியாகம, நாகொட. ஹிமதூவ மற்றும் பத்தேகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் தற்போது மண்சரிவு அபாயத்திற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், அவற்றை அண்மித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் மாலா அலவத்துவல தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதியின் கொக்மடுவ – வெலிபன்ன ஆகிய வெளியேறும் பகுதிகளில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதால், சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுள்ளது. தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துவோர் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் செல்லுமாறு அதிவேக வீதியின் திட்டமிடல் மற்றும் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மக்களுக்காக தேசிய காப்புறுதி நிதியம் தற்போது ஒருகோடி ரூபாவை அவசர சேவைகளுக்காக வழங்கியிருப்பதாக தேசிய காப்புறுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சனத் டி சில்வா தெரிவித்துள்ளார். அதுபோல், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முதற் கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிலவும் அடைமழை காரணமாக நீரேந்து நிலைகளுக்கு அருகில் உள்ள பிரதான ஆறு நீர்மின் உற்பத்தி நிலையங்களின் நீர்மட்டம் 58 சதவீதம் வரை உயர்வடைந்திருப்பதாக மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேல், தெற்கு மற்றும் தென் அக்கினி மூலை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர் வரை உயர்வடையலாம் எனவும், பிரதேசங்களின் கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கடற்சார் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, பொத்துவில், புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசந்துறை பிரதேசங்களில் சிறு வள்ளங்கள் மற்றும் படகுகளின் மூலம் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11