ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவும், ஐக்கிய தேசிய முன்னணியின் சகல கட்சிகளினதும் ஆதர அவருக்கு வழங்குவதற்குமான யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பு சுகாததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற கட்சியின் விசேட மாநாட்டின்போது இந்த யோசனை நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை முன்மொழிந்தார். இதன்போது மேலும் பல யோசனைகளும் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் தலைவராக தொடர்ந்தும் நியமிப்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டது. கடந்த வருடம் 51 நாட்களாக இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்த அனைவருக்கும், இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் நன்றி தெரிவிக்கும் யோசனையும் இதன்போது நிறைவேற்றப்பட்டது.