அனுகூலமான பொருளாதார திட்டத்தை அறிமுகம் செய்யப் போவதாக பிரதமர் அறிவிப்பு

Share Button

சகல மக்களுக்கும் முறையான பொருளாதார அனுகூலங்கள் கிடைக்கின்ற வேலைத்திட்டம் அவசியம் என பிரதம மந்திரி மஹிந்த ராபஜக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அவர் அலுவலர்கள் மத்தியில் உரையாற்றினார்.

சர்வதேச சந்தையை பரிசீலித்து, வெளிநாட்டு ஒதுக்கத்தை பாதுகாத்துக் கொண்டு ஏற்றுமதியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கக் கூடிய முறையொன்றில் பிரவேசிப்பது அவசியம். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் கூடுதலான அந்நிய செலாவணியை ஈட்டலாம் என பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

பிரதம மந்திரி வரி கட்டமைப்பை எளிமையாக்குவது பற்றியும் பேசினார். உள்ளுர் வர்த்தகர்களிடமிருந்து கூடுதலான வரி அறவிட்டு, அவர்களை சுரண்டும் நிலையை ஏற்படுத்தக் கூடாது. இந்த வர்த்தகர்கள் வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பொருளாதாரக் கொள்கைகளில் நிச்சயமான தன்மை முக்கியமானதென திரு ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாதந்தோறும் எரிபொருள் விலை அதிகரிக்கும் முறைக்கு மாற்றுத் தீர்வு காண்பது அவசியமாகிறது.

அரசாங்கத்திற்கு நிதி தேவை என்றாலும், மக்களை சிரமத்திற்கு உள்ளாக்காது, பணம் ஈட்ட வேண்டுமென நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரான பிரதமர் குறிப்பிட்டார்.

அன்று, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உச்சம் தொட்டாலும், பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு இருந்தது என அவர் கூறினார்.
தசிய உற்பத்தியை அதிகரித்து, மக்களுக்கு ஜீவனோபாய வழிவகைகளை உருவாக்கி, கிராமங்களுக்கும் நிதிப் பாய்ச்சல் இடம்பெறுவதை உறுதி செய்த காரணத்தால் பொருளாதார சவால்களை சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது.

அந்தக் காலப்பகுதியில் ஆறு சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதும் சாத்தியமானது. நாட்டின் பல பாகங்களிலும் மின் விநியோகத்தை விஸ்தரித்து, வீதிகளை அபிவிருத்தி செய்து, நீர்ப்பாசனத் திட்டங்களை அமுலாக்கி, பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும் அபிவிருத்தி செய்ய முடிந்ததென பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்களும், உள்ளுராட்சி தேர்தல்களும் தொடர்ந்து பின்போடப்பட்ட சந்தர்ப்பத்தில் மௌனம் சாதித்தவர்கள், பாராளுமன்றம் சில தினங்கள் ஒத்திவைக்கப்பட்டமைக்கு பெரும் குரல் கொடுக்கிறார்கள்.

நாடு எதேச்சாதிகாரத்தை நோக்கி செல்கிறதென சித்தரிப்பது சிலரது நோக்கம். ஆனால், அத்தகைய நிலையொன்று இல்லை என பிரதமர் தெரிவித்தார்.

நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல உரையாற்றுகையில், நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும், மக்களின் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாணும் ஆற்றல் திரு ராஜபக்ஷவுக்கு உண்டென கூறினார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *